Sunday, January 30, 2011

வழுக்கை - ஒரு விளக்கம்

தலைமுடியைப் பற்றி மிகவும் இளக்காரமாக நினைப்பவர்கள் நாம். ‘வந்தால் மலை, போனால் மயிர்’ என்கிற மாதிரி பல பழமொழிகள் நம்மிடையே வழக்கத்தில் உண்டு. ஆனால், உண்மை நிலவரம் என்ன? முப்பது வயதில் தலைமுடி வெளுக்க ஆரம்பித்தாலே நம்மவர்களின் உற்சாகம் குறைய ஆரம்பித்து விடுகிறது. முடி கொட்ட ஆரம்பித்துவிட்டால், குய்யோ, முறையோ என்று கத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். தலைமுடி ஏன் உதிருகிறது? முடி விஷயத்தில் என்னென்ன நோய்கள் ஏற்படும்? அதைத் தடுக்கும் வழிமுறைகள் என்ன என்பது பற்றி விளக்கமாகச் சொல்கிறார் டாக்டர் முகேஷ் பாத்ரா. மும்பை மருத்துவரான பாத்ரா, கீழ்ப்பாக்கத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறார். ஹோமியோபதி மருத்துவத்தில் ஆழ்ந்த அனுபவம் கொண்டவர். இன்டர்நெட்டிலேயே ஐந்து லட்சம் நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை அளித்து லிம்கா உலக சாதனைப் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் டாக்டர் பாத்ரா.

‘‘நம் உடம்பில் ஐந்து மில்லியன் முடிகள் உள்ளன. தலையில் மட்டும் எண்பதாயிரம் முதல், ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் முடிகள் உள்ளன. புரோட்டின் சத்தில் உள்ள கேரட்டின் என்கிற மூலப்பொருள்தான் முடிகள் வளர்வதற்குக் காரணமாக இருக்கிறது. புரோட்டின் சத்து குறைந்தால், முடி அதிகமாக உதிரும் என்பதைச் சொல்லவே தேவையில்லை. யூமெலானின் (eumelanin) என்கிற பொருள்தான் நம் தலைமுடி கறுப்பாக இருப்பதற்குக் காரணம். பொமேலானின் (Pheomelanin) என்கிற பொருள் அதிகமாக இருந்தால், தலைமுடி செம்பட்டையாக இருக்கும். இந்தியர்களின் ரத்தத்தில் யூமெலானின் அதிகமாக இருப்பதால், நம் தலைமுடி கறுப்பாகவே இருக்கிறது.

நம் உடம்பில் எத்தனை முடி இருக்கிறதோ, அவற்றுக்கான அடித்தண்டு (follicies), தாயின் வயிற்றில் இருக்கிற போதே தோன்றி விடுகிறது. பிறப்பிற்குப்பின் புதிய முடி வளர்வதற்கான அடித்தண்டு எதுவும் தோன்றுவதில்லை. ஒவ்வொரு அடித்தண்டிலும் இருபது முதல் முப்பது முறை முடி வளரும். ஒருமுறை முடி வளர்ந்தால், மூன்றிலிருந்து ஐந்து வருடம் வரை இருக்கும்.

தலையில் வளரும் முடி ஒரு மாதத்துக்கு அரை இன்ச் என்கிற ரீதியில் வளரும். வெயில் காலத்தில் வேகமாக வளரும். தலைமுடியின் வளர்ச்சி பதினைந்திலிருந்து முப்பது வயதுக்குள் அதிவேகமாக இருக்கும்.

ஒரு மாத காலத்துக்குள் ஐம்பதிலிருந்து நூறு முடி உதிர்ந்தால், அது நார்மலான விஷயம்தான். அதனால் ஒன்றும் கவலைப்பட வேண்டியதில்லை. இதேபோல தலைவாரிக் கொள்கிற நேரத்தில் 15_20 முடிகள் உதிரலாம். பெண்கள் குளிக்கும்போது முப்பது முடிவரை உதிரலாம். தலைவாரிக் கொள்ளும்போது 40 முதல் 60 முடிகள் உதிரலாம்.

தலைமுடி உதிருவதில் மூன்று முக்கியமான நிலைகள் உண்டு. முதலாவது, அனெகன் (ணீஸீணீரீமீஸீ). இந்த நேரத்தில் முடியின் அடித்தண்டு நம் உடம்பில் நன்றாகக் காலூன்றி வளரும். இரண்டாவது நிலை, கேடகன் (சிணீtணீரீமீஸீ). நன்கு வளர்ந்த முடி அதற்கு மேலும் வளராமலும், விழவும் முடியாத நிலையில் இருக்கும். மூன்றாவது, டெலகன். நன்கு வளர்ந்த முடி கீழே விழுந்த பருவம்தான் இந்த நிலை.

தலைமுடி இழப்பில் இருபதுக்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. எனினும், மூன்று முக்கியமான வகைகளை மட்டும் விளக்கமாகச் சொல்கிறேன்.

1. ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை.

2. பெண்களுக்கு ஏற்படும் வழுக்கை.

3. அலோபேசியா ஏரியாட்டா.

ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை:
ஆன்ட்ரியோஜெனிக் அலோபேசியா என்று இதற்குப் பெயர். முப்பதிலிருந்து ஐம்பது சதவிகித ஆண்களுக்கு, முப்பது முதல் ஐம்பது வயது வரை உள்ளவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

இதற்குப் பல காரணங்கள் உண்டு. வழுக்கை பரம்பரையாக ஏற்படுவது என்பது தவறான கருத்து. இதற்கு ஐம்பது சதவிகித வாய்ப்புகளே உண்டு. தலையில் ஏற்படும் பொடுகினாலும் தலைமுடி பலமிழந்து போகலாம். மனஉளைச்சல் காரணமாகவும் தலைமுடி சரமாரியாக விழலாம். மஞ்சள் காமாலை, மலேரியா, டைபாயிட் போன்ற நோய்கள் வந்தாலும் தலைமுடி உதிரும். சிகரெட் பிடிப்பதும், தலைமுடி உதிர்வதற்கு ஒரு முக்கியமான காரணம். கைகால் வலிப்பு நோய்க்கான மருந்துகளைச் சாப்பிடும்போது, உயர் ரத்த அழுத்தம் தொடர்பான மாத்திரைகளைச் சாப்பிடும்போது, சில வகையான நோய் எதிர்ப்புச் சக்தி தரும் மாத்திரைகளை சாப்பிடும்போதும் தலைமுடி கொட்ட ஆரம்பிக்கும். சுடவைத்த தண்ணீரில் குளிப்பதாலும், தலையில் கண்டபடி டை அடிப்பதாலும்கூட முடிகள் உதிரலாம்.

நம் ரத்தத்தில் டிஹெச்டி என்று ஒரு பொருள் இருக்கிறது. இது ரத்தத்தில் அதிகமானால், முடி கொட்ட ஆரம்பிக்கும் என்று எல்லா மருத்துவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.

பெண்களுக்கு ஏற்படும் வழுக்கை:
பெண்களின் உடம்பில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால்தான் தலைமுடி நிறைய கொட்டும் வாய்ப்பு உண்டு. பெண்கள் பூப்படைந்தவுடன், அதாவது 12 முதல் 14 வயதுக்குள் நிறைய தலைமுடி இழக்கலாம். பிரசவம் முடிந்த சில மாதங்களுக்குள் நிறைய தலைமுடி கொட்டலாம். நாற்பத்தைந்து வயதில் மாதவிடாய் நிற்கிறபோதும் தலைமுடி உதிரலாம்.

சில பெண்களுக்கு தைராய்டு சம்பந்தமான பிரச்னை உருவாகும்போதும் முடி உதிரலாம். இன்னும் சில பெண்களுக்கு ‘ஓவரி’யைச் சுற்றி ஏற்படும் நோய்களாலும், அதனால் ஏற்படும் ஹார்மோன் அதிகமாகவோ, குறைவாகவோ சுரப்பதாலும் முடி உதிரலாம்.

ஊட்டச்சத்து குறைவாக இருக்கும்போது, முடி உதிர்கிறது. உதாரணமாக, நம் ரத்தத்தில் இரும்புச் சத்து குறைந்தால், முடி அதிக அளவில் உதிரும். பெண்களுக்கு ஹேமோகுளோபின் எண்ணிக்கை பன்னிரண்டோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருக்க வேண்டும்.

கர்ப்பத் தடை மாத்திரைகளைச் சாப்பிடுகிற போதும், பெண்களுக்கு அதிக அளவில் முடி உதிர்ந்து வழுக்கை ஏற்படலாம். நகர்ப்புறங்களில் குறிப்பிட்ட சில உணவு வகைகளையே மீண்டும் மீண்டும் சாப்பிடுவதனால், சில வகை சத்துகள் குறைந்துவிடுகின்றன. இதனாலும் முடி உதிர்கிறது.

அலோபேசியா ஏரியாட்டா:
வழுக்கைகளிலேயே மிக ஆச்சரியமான விஷயங்களை உள்ளடக்கியது அலோபேசியா ஏரியாட்டா என்கிற வழுக்கைதான். இளம் பருவம் முதல் எண்பது வயதுக்குள் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். தலையில் மட்டுமல்ல, உடம்பின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வரலாம். தலையில் உள்ள முடி அதிவேகத்தில் உதிர ஆரம்பிக்கும். பதினைந்தே நாட்களுக்குள் தலை சொட்டை ஆகிவிடும்.

இப்படி திடீரென முடி உதிர்வதற்கான காரணம் வேடிக்கையானது. நம் உடம்பிற்குத் தேவையில்லாத, கெடுதல் தரக்கூடிய பாக்டீரியாக்கள் நம் உடம்பிற்குள் நுழைந்துவிட்டால், அதை அழித்துவிடுவது நம் உடலின் இயற்கையான அமைப்பு. உதாரணமாக, நோய்களை உருவாக்கும் பாக்டீரியாக்கள் நமக்குள் புகுந்தால், அதைக் கொல்வது நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியின் வேலை. ஆனால், சில சமயங்களில் நம் உடலில் உள்ள முடிகள் தேவையில்லாதவை; அவற்றை இல்லாமல் ஆக்கிவிட வேண்டும் என்று நம் உடல் தவறாக நினைப்பதால், நம் உடலில் உள்ள முடிகள் எல்லாம் உதிர்ந்துவிடுகின்றன.

என்ன மருந்து?
ஹோமியோபதி மருத்துவத்தில் எல்லோருக்கும் ஒரே மருந்து என்று சொல்ல முடியாது. நோயின் தன்மை, நோயாளியின் உடல்நிலை, அறிகுறிகள் போன்ற விஷயங்களை வைத்துத்தான் மருந்து கொடுப்போம். இந்த மூன்று வகை நோய்களுக்கும் அறுவை சிகிச்சையோ, தலையில் முடிகளை நடுவதோ எல்லாம் கிடையாது. மருந்துகளின் மூலம், உடல் தன்மையை மாற்றுவதன் மூலம் தலையில் முடி முளைப்பதை நிச்சயமாக அதிகரிக்க முடியும். தலைமுடி பிரச்னை இருப்பவர்களுக்கு தனித்தனியாக நாங்கள் சிகிச்சை அளித்தாலும், என்னைத் தேடி வந்தவர்களுக்கு அந்தப் பிரச்னையிலிருந்து நிச்சயமான தீர்வைக் கண்டிருக்கிறேன்’’ என்கிறார் டாக்டர் பாத்ரா.

ஏ.ஆர். குமார்,
நன்றி - குமுதம் 28.8.௨௦௦௩
இப்படிக்கு... தென்றல்

Wednesday, January 26, 2011

கர்ப்பமும் உறவும்

கர்ப்பமாக   இருக்கும்  பெண்கள்  கேட்கக்   கூச்சப்படும்  முக்கியமான   கேள்வி   செக்ஸ்  பற்றி  தான்.   கர்ப்பத்தின்  போது  செக்ஸ்  உறவு   வைத்துக் கொள்ளலாமா?    என்பது  தான்.  அப்படி  செக்ஸ் வைத்துக் கொள்வது    என்றால்  எப்போது வைத்துக் கொள்ளலாம் என்ற  குழப்பமும்   அவர்களை  ஆட்டுவிக்கும்.   கரு  உருவான  முதல்  மூன்று  மாதங்கள்  சரியான  பிடிப்பின்றி  இருக்கும்.  அந்த  மாதங்களில் 'அபார்ஷன்'   ஏற்படும்  சந்தர்ப்பங்கள் அதிகம்.   அதனால் தான்  அப்போது  பஸ், ஆட்டோ, டூ வீலர்  போன்ற  வாகனங்களில்   செல்வது  மட்டுமல்ல,  செக்ஸ்  உறவு   வைத்துக்  கொள்வதையும்   தவிர்க்க  வேண்டும்.  அதே  போல   கடைசி  மாதமான  ஒன்பதாவது    மாதத்திலும்   செக்சை   தவிர்ப்பது  நல்லது.

குழந்தை   பிறப்பை  எதிர்பார்த்துக்  கொண்டிருக்கும்  அந்த  நேரத்தில்   செக்ஸ்  வைத்துக்   கொள்ளும்  போது  நோய்தொற்று   ஏற்படக்கூடிய   வாய்ப்பு   உண்டு  என்பதால்  தவிர்ப்பது  நல்லது.   இந்த  நான்கு  மாதங்களை  தவிர  மற்ற  ஐந்து   மாதங்களில்   தாராளமாக  செக்ஸ்  உறவு   வைத்துக்கொள்ளலாம்.  இதுவும்   கூட   சாதாரணமாக   கர்ப்பம் அடைந்திருக்கும்  பெண்களுக்குத்தான்   பொருந்தும்.  கருப்பையில்,  கரு  தங்காமல்  தொடர்ந்து    திரும்ப,  திரும்ப  'அபார்ஷன் '  ஏற்படும்   பெண்கள்,   கர்ப்பப்பை  பலவீனமாக   இருக்கும்  பெண்கள்  கர்ப்ப   காலம்  முடியும்  வரை   செக்ஸ்  உறவு   வைத்துக்   கொள்ளாமல்  இருப்பது  நல்லது.

இப்படிக்கு... தென்றல்

மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)

மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது.

மூட்டுத் தேய்மானம் இரண்டு வகைப்படும்:

1)மூட்டழற்சி(osteo arthritis):இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.

2)முடக்குவாதம்(rheumatoid arthritis): இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள்,மணிக்கட்டு,கால் போன்ற பகுதிகளையே தாக்கும்.

அறிகுறிகள்:

மூட்டழற்சி: நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி அதிகமாகும்.

முடக்குவாதம்: இது ஆரம்பத்தில் தெரியாது நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். மொத்த உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும்.

காரணம்:முக்கிய காரணம் அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம். முடக்குவாதம் சில கிருமிகளினாலும், ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரண்மாகும். பரம்பரை ரீதியாகவும் மூட்டுத்தேய்மானம் ஏற்படலாம்.

கைவைத்தியம்:

1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். புதிதான உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

2.ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

3.இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

4. வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.

5.ஒரு தேக்கரண்டி குதிரைமசால்(இது ஒரு கால் நடை தீவனம்) விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று-நான்கு முறை அருந்தலாம்.

6.இது ஒரு ஸ்பெயின் மருத்துவரின் குறிப்பு, மேலும் நல்ல பலனை தரும். இரண்டு மேஜைக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். இந்த மருந்தை சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.

7.ஒரு மேஜைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.

உணவுப்பழக்கம்:

* வாழைப்பழம் அதிகமாக உண்ண வேண்டும். காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும். கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.

* கால்சியம் அதிகம் உள்ள பால்,பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும்

தவிர்க்கவேண்டியவை: காரமான வறுத்த உணவுகள், தேநீர், காபி, பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தம்.

நன்றி...சுரேஷ் குமார், தமிழ் பிரவாகம்
இப்படிக்கு...தென்றல்

Tuesday, January 18, 2011

முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி?

பருவ வயதில் "ஆன்ட்ரோஜன்" என்ற இயக்குநீர் (Androgen Harmone) ஆண், பெண் இருபாலருக்கும் சுரக்க தொடங்கும். சில சமயங்களில் ஆன்ட்ரோஜன் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போது முகப்பரு உண்டாகிறது.

சருமத்தில் கொழுப்புச் சுரப்பிகள் (Sebaceous Glands) உள்ளது, அவை "சீபம்" (Sebum) என்ற எண்ணைப்பசை போன்ற ஒரு பொருளை வெளியேற்றுகிறது. இவை மயிர்க்கால்களில் தங்கி சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கப் பயன்படுகின்றன. பருவ வயதில் சுரக்கும் அதீத ஆன்ட்ரோஜன் இந்த எண்ணைப்பசையை மிக அதிகமாக சுரக்க வைக்கின்றன. அப்போது அவை மயிர்க்கால்களில் வழக்கத்தைவிட அதிக அலவில் படிந்து, திரண்டு, ரவை போன்ற முகப்பருக்கலை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களில் பாக்டீரியா கிருமிகள் பருக்களில் தொற்றிக்கொள்ள, பருக்கள் பெரிதாக வீங்கிக் கொள்கின்றன.எப்படி என்பதை இப்போது பார்ப்போம்:


முகப்பருவைப் போக்கவும்,ன் தடுக்கவும் கீழ்க்காணும் வழிமுறைகள் நிச்சயம் உதவும்:

1. முகத்தை சோப்புப் போட்டு வெதுவெதுப்பான தண்ணீரால் அடிக்கடி கழுவுங்கள்.

2. முகத்தில் பவுடர் பூசுவதையும், அழகு சாதன களிம்புகள் உபயோகப்படுத்துவதையும் தவிருங்கள்.

3. சுத்தமான காற்றும், சூரிய ஒளியும் முகத்திற்கு தேவை.

4. கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளையும், நெய், வெண்ணெய் கேக், ஐஸ் கிரீம், சாக்லெட், பாலாடை போன்றவற்றையும் ஒதுக்குங்கள்.

5. கீரை மற்றும் பச்சை காய்கறிகளை நிறைய சாப்பிடுங்கள்.

6. தினமும் இரண்டு லிட்டருக்கு குறையாமல் தண்ணீர் குடியுங்கள்.

7. மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

8. பருக்களை கிள்ளுவதோ, அதலுள் இருக்கும் ரவை போன்ற பொருளை வெளியேற்ற அழுத்துவதோ கூடாது.

9. பருக்களில் சீழ் வைத்தால் "டெட்ராசைக்ளின்" (Tetracycline) மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைக்கும் கால அளவுக்கு தொடர்ந்து சாப்பிடுங்கள்.

10. பருக்களின் மேல் பூசுவதற்கு பலவித களிம்புகள் கிடைக்கின்றன. அவற்றை தேர்வு செய்வதற்கு மருத்துவரின் உதவியை நாடுங்கள்

நன்றி ..தமிழ் ஜோதி
இப்படிக்கு... தென்றல்

Wednesday, January 12, 2011

நீரிழிவு – உணவு முறை

நீரிழிவு சிகிச்சையில் உணவு முதலிடத்தை வகிக்கிறது. நவீன மருத்துவத்தில் நீரிழிவுக்காரர்களுக்கு உணவில் கட்டுப்பாடுகள் இருப்பதால் நமது பாரம்பரிய உணவு முறைகள் மறைந்து போயுள்ளது. ஆனால் தமிழ் நாட்டிலுள்ளவர்களுக்கு உணவு முறையை மாற்றியமைக்க வேண்டியதில்லை. ஏனென்றால் நம்நாட்டு மக்களின் சராசரி உணவு பழக்கத்தில் மாவுச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த உணவாகத்தான் பரிமாரப்படுக்கிறது.

உணவுக்கட்டுப்பாடு என்றாலே பலர் அச்சம் கொள்கின்றனர்.இந்த உணவு முறை சிகிச்சை மிகவும் சிக்கலானது என்றே பெரும்பாலான நீரிழிவுக்காரர் தவறாக கருதி கொள்கின்றனர். உண்மையில் இது மிக மிக எளிதான முறை இதில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய 2 விதிகள்

1. எந்த உருவிலும் சர்க்கரையை சாப்பிடக் கூடாது.
2. மொத்த கலோரி(calorie) அளவைக் கட்டுப்படுத்துதல்.

நீரிழிவுக்காரர்களின் எதிரி என்று சொல்லப்படும் அரிசி உணவையே அவர்கள் சாப்பிடலாம். ஏன்னென்றால் கோதுமை, இராகி, அரிசி இம்முன்றிலுமே ஒரே அளவு மாவுச்சத்து இருப்பதே காரணம். வெள்ளை அரிசியை விட கைகுத்தல் அரிசியே சிறந்தது.ஆனால் உட்கொள்ளும் அளவை குறைத்து கொள்ளவேண்டும்.சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள மணிச்சம்பா அரிசி (சந்தையில் உள்ள மூல்கிரி அரிசி),பல்வேறு ஆய்வுகளுக்குட்படுத்தப்பட்டு(Low Glycemic Index) நீரிழிவுக்குச் சிறந்த்து என்று நிருபிக்கப்பட்டுள்ளது.

நீரிழிவுக்கார்ர்களுக்கென்று வீட்டில் தனியாக சமையல் தேவையில்லை. மற்றவைகளுக்கு சமைக்கப்படும் உணவையே சாப்பிடலாம்.அரிசி உணவு குறைவாகவும்,கீரை,காய்கறிகள் போன்ற நார்ச்சத்து மிகுந்த சத்துள்ள உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.

காய்கறிகள் நீரிழிவுக்கார்ர்களின் தோழர்கள்.தரைக்குக்கீழ் வளரும கிழங்கு சாப்பிடக் கூடாது. இரண்டு சாப்பாட்டிற்கிடையில் வயிற்றை நிரப்புக் கூடிய மோர்,சூப், எலுமிச்சை பழச்சாறு, தக்காளிச்சாறு மற்றும் தக்காளி வெள்ளரிக்காய் சாலட் அதிகமாக சாப்பிட வேண்டும். மதுப் பழக்கத்தையும் நொறுக்குத் தீனி திண்பதையும் அடியோடு நிறுத்த வேண்டும்.

உணவு அட்டவணை
சாப்பிடக் கூடாது.
1. சர்க்கரை.
2. கரும்பு.
3. சாக்லெட்.
4. குளுக்கோஸ்.
5. காம்பளான்.
6. குளிர் பானங்கள்.
7. சாம் வகைகள்.
8. பால் கட்டி.
9. திரட்டுப்பால்.
10. பனிக்கூழ்.
11. வாழைப்பழம்.
12. பலாப்பழம்.
13. மாம்பழம்.
14. நுங்கு.
15. சப்போட்டா.
16. சீதாப்பழம்.
17. உலர்ந்த திராட்சை.
18. சேப்பங்கிழங்கு.
19. உருளைக்கிழங்கு.
20. சர்க்கரைவள்ளிக்கிழங்கு.

அளவோடு சாப்பிடலாம்.
1. கம்பு.
2. ஓட்ஸ்.
3. அரிசி.
4. அவல்.
5. இரவை.
6. பார்லி அரிசி
7. சோளம்.
8. மக்காச் சோளம்.
9. கேழ்வரகு.
10. கோதுமை.
11. பாதாம் பருப்பு.
12. முந்திரிப் பருப்பு.
13. வேர்க்கடலை.
14. பிஸ்தா பருப்பு.
15. வால் நட்.Font size

அளவில்லாமல் சாப்பிடலாம்.
1. பாகற்காய்
2. சுரைக்காய்.
3. வாழைத்தண்டு.
4. வெள்ளை முள்ளங்கி.
5. தக்காளி.
6. கொத்தவரங்காய்.
7. காராமணி.
8. வெள்ளரிக்காய்
9. அவரைக்காய்.
10. முருங்கைக்காய்.
11. கீரை.
12. கண்டங்கத்திரி.
13. கோவைக்காய்.
14. வெங்காயம்.
15. பூசணிக்காய்.
16. கத்திரிக்காய்.
17. வாழைப்பூ.
18. பீர்க்கங்காய்.
19. பப்பாளிக்காய்.
20. வெண்டைக்காய்.
21. முட்டைக்கோஸ்.
22. நூல்கோல்.
23. கோவிப்பூ.
24. சீமை கத்திரிக்காய்.

நன்றி Dr நடராஜன்
இப்படிக்கு... தென்றல்

Thursday, January 6, 2011

எளிய மருத்துவக் குறிப்புகள்

1) பொன்மேனி தரும் குப்பைமேனி:
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.

2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு:
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.

3) வயிற்றுவலி போக்கும் நறுவலி:
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.

4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை:
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.

5) தலைபாரம் நீக்கும் கிராம்பு:
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.

6) காயத்துக்கு காட்டாமணக்கு:
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.

7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி:
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.

8) குழந்தையை காப்பான் கரிப்பான்:
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.

9) கடலையும் அடிதடியும்:
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.

10) மயக்கத்துக்கு ஏலம்:
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.

11) புளியிருக்க புண்ணேது?
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.

12) பால்கட்டுக்கு பாசிப்பயிறு:
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.

13) மயிர்கறுக்க மருதோன்றி:
மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.

14) வாந்தி நீக்கும் நெல்லி:
நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.

15) படர்தாமரைக்கு:
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.

16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு:
கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.

17) மலச்சிக்கலுக்கு:
பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.

18) மூலம் அகல:
ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.

19) முகப்பொலிவிற்கு:
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு:
மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

21) கல்லடைப்புக்கு – தாம்பூலம்:
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.

22) தாய்ப்பால் சுரக்க கீரை:
கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால் சுரக்கும்.

23) அரையாப்பு தீர:
எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.

24) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை:
புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.

25) கர்ப்பிணிகளுக்கு குடிநீர்:
கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, மலசலம் வெளியேறும்.

26) பசி உண்டாக:
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

27) இருமலுக்கு தேனூறல்:
5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.

28) வெள்ளை தீர்க்கும் புங்கன்:
புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.

29) அரையாப்புக்கு அரிசிக் களிம்பு:
முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.

30) துத்தி டீ:
துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.

31) வாய்ப்புண் தீர்க்கும் மருதாணி:
மருதாணி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்கத் தீரும்.

32) நீர்த்துவார எரிவு தீர:
வால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.

33) அஜீரண பேதிக்கு:
மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.

34) உடல் இளைத்தவருக்கு:
பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

35) இரத்த கடுப்புக்கு:
மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை குணமாகும்.

36) வெளுத்த மயிர் கறுக்க:
கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால் மயிர்கள் கறுத்து வளரும்.

37) தொண்டை கம்மல் தீர:
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.

38) வண்டுகடிக்கு:
வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.

39) சூட்டுக்குத் தைலம்:
அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.

40) கிருமிகள் விழ:
வேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில் மைபோலரைத்து சுண்டைகாயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடுக்க கிருமிகள் வந்துவிடும்.

41) மூலம் தீர்க்கும் ஆவாரை:
ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.

42) மூலத்திற்கு வேது:
இளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.

43) ஈளை தீர்க்கும் இம்பூரல்:
இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம், ஈளை இருமல் குணமாகும்.

44) கைநடுக்கம் தீர:
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.

45) இருமல் தீர:
இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.

46) காதில் சீழ் வருதல் தீர:
இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.

47) தொண்டை புண்ணிற்கு:
நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.

48) தலைவலிக்கு:
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.

49) சீதபேதிக்கு:
நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.

50) யானைக்கால் வீக்கம் வடிய:
முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடியும்.

51) விக்கல் தீர்க்கும் இந்துப்பு:
இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.

52) புண்கள் ஆற:
தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.

53) முடி உதிர்வதை தவிர்க்க:
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

54) கட்டிகள் உடைய:
சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும்.

55) அண்ட வாத கட்டு:
பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும்.

56) கண் பூ குணமாக:
சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.

57) இரத்த மூத்திரத்திற்கு:
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும்.

58) இரத்த மூலம் குணமாக:
வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.

59) அசீரணம் குணமாக:
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

60) வேர்க்குரு நீங்க:
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.

61) தேக ஊறலுக்கு:
கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளைக்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.

62) சூட்டிருமலுக்கு:
சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடுத்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.

63) நெருப்பு சுட்ட புண்ணிற்கு:
வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.

64) நீர்க்கடுப்பு எரிவு தீர:
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்

65) சகல விஷத்திற்கும்:
நசியம்குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.

66) பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க:
சூரணம்கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வரவும்.

67) பால் உண்டாக:
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.

68) தோலில் ஊறல், தடுப்பு இவற்றிற்கு:
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து வேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.

69) உடல் வலுவுண்டாக:
சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்து பாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.

70) குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளி:
மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.

71) தேமல் மறைய:
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.

72) வாயு கலைய:
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.

73) பாலுண்ணி மறைய:
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.

74) தொண்டை நோய்க்கு:
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.

75) பெளத்திரம் நீங்க:
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.

76) தீச்சுட்ட புண்களுக்கு:
வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.

77) தேக பலமுண்டாக:
நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.

78) படைகளுக்கு:
பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.

79) கண்ணோய் தீர:
வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்ணோய் தீரும்.

80) கற்றாழை நாற்றத்திற்கு:
கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும்.

81) சேற்று புண்ணிற்கு:
மருதோன்றி இலையை அரைத்து பூச குணமாகும்.

82) நகச்சுற்று குணமாக:
வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.

83) முகப்பரு குணமாக:
சங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.

84) புழுவெட்டு குணமாக:
அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.

85) பொடுகு குணமாக:
வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.

86) தழும்பு மறைய:
வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.

87) முறித்த எலும்புகள் கூட:
வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் கொடுத்துவர, முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.

88) பால் சுரக்க:
பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.

89) தண்ணீர் தெளிய:
தேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் தண்ணீர் தெளிந்து நிற்கும்.

90) கண் நீர் கோர்த்தல் தணிய:
மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத்துண்டை நனைத்து நிழலிலுலர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள், இச்சீலையைக் கொண்டு கண்களை துடைத்துவர கண்சிவப்பு, கண்ணருகல், கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.

91) புகையிலை நஞ்சுக்கு:
வெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள புகையிலை நஞ்சு மாறும்.

92) குடிவெறியின் பற்று நீங்க:
மிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டை, சருக்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.

93) நீரிழிவு நீங்க:
தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.

94) பெரும்பாடு தணிய:
அசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிகரண்டியளவு கொடுத்துவர பெரும்பாடு தணியும்.

95) நரம்பு தளர்ச்சி நீங்க:
அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர, நரம்பு தளர்ச்சி நீங்கும்.

96) வீக்கத்திற்கு ஒற்றடம்:
நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.

97) மூட்டுப் பூச்சிகள் அகல:
ஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் இப்பூச்சிகள் மயங்கி இறக்கும்.

நன்றி...தமிழ் மருத்துவம்
அன்புடன்...தென்றல்